அமெரிக்க புதிய ஜனாதிபதியாக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிரடியாக பல உத்தரவுகள் பிறப்பிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்த உத்தரவுகளில் நாடு கடத்துதல் திட்டம், எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு, வட அமெரிக்காவுக்கு வரி விதித்தல், குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு, எரிசக்தித்துறையில் புரட்சி மற்றும் குடியுரிமை வழங்குவதில் மாற்றம் உள்ளிட்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.
நாடு கடத்துதல் திட்டம்
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நாடு கடத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் புகலிடம் தேடுவோர், தெரிவிக்கப்படாத குடியேறிகள் எனச் சுமார் 11 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களில் 500,000 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புகலிடம் தேடுவோரைப் பாதுகாக்கும் சட்ட நடைமுறைகளை டிரம்ப் முடக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு
வெளிநாட்டைச் சேர்ந்த குடியேறிகள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது தங்கவோ தடை விதிக்க அமெரிக்க எல்லைகளில் அவசரநிலையை அறிவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்கு Title 42 எனும் சட்டத்தை நடைமுறைபடுத்தலாம் என கருதப்படுகிறது.
வட அமெரிக்காவுக்கு வரி விதித்தல்
கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இதற்காக போதைப்பொருள் கடத்தலை அவர் காரணமாகச் சுட்டினார். இதனால் வட அமெரிக்காவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படலாம்.
குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு
டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் வழக்குகளை ஆராய்ந்து பொதுமன்னிப்பு வழங்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
எரிசக்தித்துறையில் புரட்சி
தேசிய எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
குடியுரிமை வழங்குவதில் மாற்றம்
அமெரிக்கக் குடியுரிமை இல்லாத தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.