அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நடுவானில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் ஹெலிகாப்டரும் கடந்த புதன்கிழமை (ஜன.29) மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் விமானச் சிதைவுகளை Potomac ஆற்றிலிருந்து வெளியேற்றும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக இராணுவப் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 67 பேரின் சடலங்களும் Potomac ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிகள் நடந்தன. ஒரு சடலத்தைத் தவிர மற்ற அனைத்தும் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பயணிகள் விமானத்தின் சிதைவுகளை மீட்கும் பணிகள் தொடந்தும் நடந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரின் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கும்.
இந்த விபத்து நேர்ந்தபோது விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை வானில் இருந்த உயரம் குறித்த முரண்பட்ட தகவல்கள் முன்னோட்டத் தரவுகளில் தெரியவந்ததாக தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.
சம்பவத்தின்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
விபத்து குறித்து 30 நாள்களில் முதற்கட்ட அறிக்கை தயாராகிவிடும் என்று தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு எதிர்பார்க்கிறது. முழு விசாரணை நிறைவடைய ஓராண்டாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.