அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் வெள்ளை மாளிகையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு வாக்குவாதத்தில் முடிந்தது.
இதனையடுத்து, உக்ரேனைக்கு அமெரிக்கா வழங்கி வந்த இராணுவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது.
இந்நிலையில், உக்ரேனுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதையும் அமெரிக்கா நிறுத்திக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜோன் ரேட்க்ளிஃப் தெரிவித்தார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்குத் தயாராக அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல் உக்ரேனுக்கு உதவி வந்தது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளமை உக்ரேனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்படாதது ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சில் இணங்க உக்ரேனிய ஜனாதிபதிக்கு கூடுதல் நெருக்குதலை அளிக்கலாம் என்று அமெரிக்காவால் கருதப்படுகிறது.
அதேவேளை, போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச விரும்புவதாக உக்ரேனிய ஜனாதிபதிவொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடமிருந்து தகவல் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது கூறினார்.
அத்துடன், உக்ரேனுக்கான இராணுவ உதவியை மீண்டும் தொடங்குவதைப் பற்றி பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்குக் கனிமங்களை வழங்கும் உடன்பாடு குறித்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.