எக்ஸ் தளம் (ட்விட்டர்), நேற்றையதினம் (10) பல மணி நேரம் முடங்கியிருந்தது. அதன்பின் மீண்டும் சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்த பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு மஸ்க் அளித்தப் பேட்டியில், “எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐ.பி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை உக்ரைனில் வழங்கப்பட்டு வருகிறது. தான் மட்டும் இந்தச் சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க், அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் எலான் மஸ்க் இந்த மிரட்டலை விடுத்திருந்தார்.
எனவே, எலான் மஸ்க்கின் சவாலை அடுத்து அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சாடப்படுகிறது.