பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் சமீப காலமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற விரைவு ரயிலை கிளர்ச்சிப்படையினர் கடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்திற்கு “பலோச் விடுதலை இராணுவம்” என்ற அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், “ரயிலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேசமயம், ரயில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மற்ற பயணிகளை விடுவித்துவிட்டோம். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக இராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அனைவரும் கொலை செய்யப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக பலுசிஸ்தானின் மாக் பகுதியில் பெஷாவர் – குவெட்டா இடையே இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆயுதமேந்திய நபர்களால் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த வகையில் ஊடகம் ஒன்றின் சார்பில் தெரிவிக்கையில், “9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 450 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ரயில் இன்று (11) காலை 9 மணிக்கு குவெட்டாவிலிருந்து புறப்பட்டது. ரயில் உள்ள இடத்தின் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகின. இருப்பினும், பாகிஸ்தான் ரயில்வே சார்பில் நிவாரண ரயிலை அனுப்பப்பட உள்ளது.
“தாதரில் உள்ள பனையூர் ரயில் நிலையம் அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன. ரயிலைச் சுற்றி துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. இதனால் ரயில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ரயில் பயணிகளும் காயமடைந்தனர். உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அருகே உள்ள சிபி மருத்துவமனையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.