தனது வளர்ப்பு நாயை விமானத்தில் கொண்டு செல்ல போதிய ஆவணங்கள் இல்லாமையால் பெண் ஒருவருக்கு, அமெரிக்கா – ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்தின் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் அந்நாய் சடலமாக மீட்கப்பட்டமையை அடுத்து அப்பெண் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.
9 வயதுடைய miniature schnauzer வகையைச் சேர்ந்த வெள்ளை நிற நாயே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாயை விமானத்தில் கொண்டுசெல்ல பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் நாயைக் கழிப்பறைக்குள் வைத்துக் கொன்று, அங்கேயே வீசிச் சென்றதாக நம்பப்படுகிறது.
மிகக் கொடுமையான மிருகவதை குற்றச்சாட்டின் கீழ் பெண் கைதுசெய்யப்பட்டார். பின்னர் 5,000 அமெரிக்க டொலர் பிணைத் தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
விமான நிலையத்திலிருந்த கண்காணிப்புக் கேமராவில் அந்தப் பெண் 15 நிமிடங்களுக்கு அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிவதாக The Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.
பிறகு நாயுடன் கழிப்பறைக்குள் நுழைந்த அவர் 20 நிமிடங்கள் கழித்து நாயின்றித் தனியாக வெளியே வந்துள்ளார். பாதுகாப்புப் பரிசோதனைகளை முடித்துவிட்டு, கொலம்பியாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறிய நிலையில் கைதுசெய்யப்பட்டார்.