பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். முதல்கட்டமாக பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார்கள் உள்ளிட்ட 70 ஆடம்பரக் கார்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகளின் குடியிருப்புகளில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட ஆடம்பரக் கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு, அந்தப் பணம் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று முதற்கட்ட ஏலம் நடந்தது. அதில் 70 ஆடம்பரக் கார்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவற்றில் 8 குண்டு துளைக்காத கார்கள், 4 மெர்சிடிஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை அனைத்தும் சந்தை விலையை விட கூடுதலாக ஏலத்தில் எடுக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக, பிரதமர் அலுவலகத்தில் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 ஹெலிகாப்டர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. மேலும், 8 எருமை மாடுகளும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டவை.