அவுஸ்திரேலிய மக்களின் இதயங்களை வென்ற தமிழ் தம்பதியினரின் மூத்த மகள், ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்புடன் பாலர் பள்ளி செல்லவிருப்பதாக உறவினர் ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையை பூர்விகமாக கொண்ட நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் மற்றும் அவர்களது அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மகள்கள் கோபிகா (4) மற்றும் தருனிகா (2) ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர்.
தம்பதியினர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு ஏற்கனவே அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் தாரூனிகாவுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டுமா என்று தீர்மானிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதால், அவர்களுடைய குடும்பம் மட்டுமே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தாருனிகாவுக்கு பாதுகாப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு விசா வழங்கப்பட்டால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவிலிருந்து அகற்ற அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது.
இந்த நிலையில் The Gladstone Observer பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அவர்களுடைய குடும்ப நண்பர் ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ், திங்கட்கிழமையிலிருந்து பள்ளி ஆரம்பிப்பது பற்றி கோபிகா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
கோபிகா பாலர் பள்ளிக்கு செல்லும்போது, அவருக்கு ஆயுதமேந்திய காவலர்களால் சூழப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், அவருடைய தந்தை நடேசலிங்கம் செல்ல உள்ளார்.
கோபிகாவின் தாயார் பிரியா, சிறுமியின் முதல் நாள் பள்ளியைப் பற்றி பெரிதும் கவலைகளை கொண்டிருந்தார். ஆனால் தற்போது ஒரு பாதுகாப்புடன் பள்ளி செல்வதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
முன்னதாக குடும்பம் நாடு கடத்தப்படுவது பற்றிய வழக்கு பெப்ரவரி 21 மற்றும் 25 திகதிகளில் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.