மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை படகு மூலம் இந்தோனேசியாவுக்கு அழைத்து வந்த அரசாங்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டு தொழிலாளர்கள் உள்பட மூன்று பேருடன் வந்த அதிவேக படகு நடுக்கடலில் எரிபொருளின்றி நின்றதாகக் கூறப்படுகின்றது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினரின் பார்வையில் சிக்கிய அப்படகிலிருந்து, மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 2 இந்தோனேசியத் தொழிலாளர்களும், இவர்களை அழைத்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தொழிலாளர்களை அழைத்து வந்த நபர், ரியூ தீவின் மாகாண அரசாங்கத்தில் பணியாற்றும் நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றிய பல இந்தோனேசிய தொழிலாளர்கள் தொடர்ந்து படகு மூலம் திரும்பும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அங்கு அன்றாட கூலிகளாகவும் முறையான விசாயின்றியும் பணியாற்றி வந்தவர்களாக அறியப்படுகின்றனர்.