இயேசுவின் இரத்தத் துளிகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் தங்கக் கலைப்பொருள் ஒன்று வடக்கு பிரான்ஸில் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை பார்ப்பதற்காக கடந்த 1,000 ஆண்டுகளாக நோர்மண்டியிலுள்ள பேகாம்ப் அபே தேவாலயத்திற்கு யாத்திரிகர்கள் வருகை தருகின்றனர். இந்த நினைவுச்சின்னம் கடந்த ஜூன் 1ஆம் திகதி தேவாலய அறையில் இருந்து திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
குறைந்த அளவு பாதுகாப்பு இருக்கும் நிலையிலேயே இது திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நினைவுச்சின்னத்தை மீட்டிருக்கும் திருடுபோன கலைப்பொருட்களை மீட்பதில் பிரபலம் பெற்ற ஆர்தர் பிரான்டன் அதனை பொலிஸாருக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.
30 சென்டிமீற்றர் கொண்ட இந்தக் கலைப்பொருளின் உள்ளே இரு உலோக விளக்குகள் உள்ளன. அதில் இயேசு சிலுவையில் அறையப்படும்போது பெறப்பட்ட இரத்தத் துளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
பிரான்டன் இந்தத் திருடு பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்து சிறிது நாட்களில் அநாமதேய மின்னஞ்சல் மூலம் திருடன் அவரை தொடர்புகொண்டு தம்மிடம் திருடியபொருள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தான் கைதாவதைத் தவிர்க்கும் வகையில் அந்தத் திருடன் நினைவுச்சின்னத்தை அட்டைபெட்டி ஒன்றில் அடைத்து பிரான்டனின் வீட்டு வாசலில் வைத்துச் சென்றுள்ளார்.