ஹாங்காங்கின் பிரபல மாடல் அழகி அபி சோய் (வயது 28) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நால்வரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற அழகி அபி சோய், பிரான்ஸ் – பாரீஸ் நகரில் இவ்வாண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தவிர கடந்த வாரம், “எல்அபிசியல் மொனாக்கோ” என்ற இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் அவரது படம் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவர் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்திருந்த தேடுதலில், வீடு ஒன்றிலிருந்து அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
அவரது 2 கால்களும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. தலை, உடல் பகுதி மற்றும் கைகளை இன்றும் தேடி வருகின்றனர்.
யாரோ, அவரைக் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளதாக ஹாங்காங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக மாடல் அழகி அபியின் முன்னாள் கணவர், முன்னாள் மாமியார், முன்னாள் கணவரின் சகோதர், தந்தை உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கொலைக்கான காரணம் குறித்து ஹாங்காங் பொலிஸார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.