இத்தாலியில் நடைபெற்று வரும் 50ஆவது G7 உச்சி மாநாட்டில் சீனாவின் வர்த்தக நடைமுறைகள் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
இது தவிர, இந்த வருடாந்திர மாநாட்டில் உக்ரேன் – காஸா பூசல்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்தும் G7 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
முக்கியமான விவகாரங்களில் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருமித்த நிலையைக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தொழிற்சாலைகளின் மிதமிஞ்சிய உற்பத்தியால் சீனா உலகச் சந்தைகளில் மலிவான பொருள்களைக் குவிப்பதாகக் கூறப்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் வர்த்தகப் பூசலில் ஈடுபட்டுள்ளன.
மாஸ்கோவுக்குப் பகுதி மின்கடத்திகளை விற்கும் சீன நிறுவனங்களுக்கு வாஷிங்டன் புதிய தடைகளை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதத்திலிருந்து சீன மின்வாகன இறக்குமதிகளுக்குப் புதிய வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
எனினும், சீனாவுடன் முழு அளவிலான வர்த்தகப் போரைத் தவிர்க்க ஐரோப்பா விரும்புவதாக ஒன்றியத்தின் அரச தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.