சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வரும் 10ஆம் தேதி கடைசிநாள் என்ற நிலையில், நேற்று வரை அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6,412 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இவர்கள் அரசு சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையத்தில் பதிவு செய்த மாணவர்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதிக்கு இன்னும் நான்கு நாட்களே மீதமுள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட 2,000 மாணவர்கள் குறைவாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 18 இடங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.