இந்திய பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெஸ்கிஸ்தான் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சீன, ரஷ்ய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் நகரில் இடம்பெற்ற கிழக்கு பொருளாதார கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் வரவேற்று பேசியிருப்பதையும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை வெளிப்படுத்துவதாக உள்ளது என அவதானிகள் கருதுகின்றனர்.
கிழக்கு லடாக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் கைப்பற்றி வைத்திருந்த பகுதியை விட்டு பழைய எல்லைக்கே திரும்பிச் செல்ல சீனா இணக்கம் தெரிவித்திருப்பதை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டும் அவதானிகள், சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னர் மோடி தவிர்த்துவிட்டு அமெரிக்கா தலைமையிலான குவாட் உச்சி மாநாட்டில் பங்கெடுப்பதற்காக டோக்கியோ சென்றதை இதனுடன் ஒப்பிட்டு, தற்போது இந்திய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
உக்ரைன் யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக ரஷ்யாவை தண்டிக்க முனையும் அமெரிக்க தரப்பு ரஷ்ய மசகு எண்ணெய் மீது விதித்திருக்கும் விற்பனைத் தடையை இந்தியா பொருட்படுத்தாமல் இந்திய ரூபா – ரஷ்ய ரூபள் எண்ணெய் வர்த்தகத்தை முன்னெடுப்பதையும் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய பெற்றோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, அமெரிக்க தடைக்கு இணங்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்திருப்பதையும் இந்திய மனமாற்றத்துக்கு உதாரணமாக குறிப்பிடுகின்றனர். இக்கொள்கையை மத்திம பாதை என்றும் சுதந்திரமாக முடிவெடுக்கும் துணிச்சல் என்றும் குறிப்பிடும் அவதானிகள், ஐ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன் தொடர்பான ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் இந்தியா பிரசன்னமாக இருக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.