தமிழ்நாடு – கடலூர் மாவட்டம், வடலூரில் ஏழைப் பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையொன்றை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு பல இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வடலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மாதங்களேயான ஆண் சிசுவையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து இவ்வாறு குறைந்த விலையில் குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர் ஒருவர் உள்ளார் என்றும் அவரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.