ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கிட்டத்தட்ட 9 மில்லியன் பேர் வசிக்கின்றனர். அதில் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிப்பவர்களும் இந்தியர்களே.
இந்நிலையில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கட்டப்பட்டிருக்கும் முதல் இந்துக்கோயிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கோயிலைக் கட்டிமுடிக்க ஏறக்குறைய 95 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
துபாய்-அபு தாபியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைக்கு சற்றுத்தொலைவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
இது அரேபிய வளைகுடாவில் கட்டப்பட்டிருக்கும் முதல் கற்கோயில் ஆகும்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இந்துக்கோயில்கள் புதிதல்ல. ஆனால், இத்தனை பிரமாண்டமாய், பாரம்பரிய முறையில் கோயில் கட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
கோயிலைக் கட்டுவதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மணற்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பளிங்குக் கற்கள், இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் கற்களை இழைத்துக் கோயில் செதுக்கப்பட்டுள்ளது.
கோயிலின் 7 கோபுரங்களும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள 7 சிற்றரசுகளைக் குறிக்கின்றன.
இந்துப் புராணங்களில் அதிகம் இடம்பெறும் யானைகள், குதிரைகள் மற்றும் யாழிகள் போன்ற விலங்குகள் மேலும், எகிப்திய, இஸ்லாமியப் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் அலங்காரங்களையும் கோயிலில் காணலாம்.
“ஒற்றுமை” என்ற சொல் பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.