இலங்கையில் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த தடையுத்தரவு விண்ணப்பம் இன்று யாழ். நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள திலீபனது நினைவுத்தூபி, அதனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பியிலான வேலி மற்றும் பதாதைகள் போன்றவற்றை அகற்றுவதற்கு யாழ். மாநகர ஆணையாளருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ். நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மேலும், குறித்த பொலிஸாரது வழக்கு விண்ணப்பத்தில் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 120 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பது தொடர்பாக அடுத்த வழக்குத் தவணையின் போது மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு யாழ். நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவானது சமாதான அறையில் முன்னிலையாகிய யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அவசர விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
திலீபனின் நினைவுகூரலை நடத்த தடை உத்தரவு வழங்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்த சபையின் ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தனர்.