2016ம் ஆண்டு யூலை மாதம் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGT) திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஆளணி பற்றாக்குறை போன்றவற்றால் மூடப்படும் அபாயம் இருப்பதாக கல்வியியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மூன்று வருடங்களாக இயங்கி வருகின்ற இவ் இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் NVQ லெவல் 5 பூர்த்தி செய்த எந்த திணைக்கள மாணவர்களுக்கும் இதுவரை தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
NVQ லெவல் 4 இணை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் இவர்கள் இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தான் கல்வி கற்றார்கள் என்ற எந்த வார்த்தைப் பிரயோகம் கூட இல்லாததனால் தாங்களாகவே தொழில் வாய்ப்பை தேட முயற்சிக்கின்ற மாணவர்களுக்கு கூட தொழில் வாய்ப்பினை பெற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது
மேலும் இந்தவருடம் உள்வாங்கப்பட்ட மாணவர்களில் 50 வீதமான மாணவர்களே கல்வி கற்கின்றனர் இவ்வாறான பிரச்சனைகள் மற்றும் ஆளணிப் பிரச்சனைகளால் மீதி 50 வீதமானவர்கள் கற்றல் செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர்.
இவ் இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது சுமார் தொண்ணூறு விரிவுரையளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் இப்பொழுது நாற்ப்பது விரிவுரையாளர்களே கடமையில் உள்ளனர்.
மீதமானர்கள் நிரந்தர நியமனங்களை பெற்றுக் கொண்டு அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி தமது பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.
விரிவுரையாளர்களை மேலும் இணைப்பதிலும் அரசியல் செல்வாக்கு பயன்படுத்துவதால் ஆளணியை நிரப்ப முடியாத நெருக்கடியான நிலைமை தொடர்கிறது.
இவர்களது அசமந்த போக்கே இவை எல்லாவற்றுக்கும் காரணம். இவை தீர்க்கப்படாது போனால் இவ் பயிற்சி நிறுவனம் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகள், அதிகாரிகள் உரிய தீர்வை பெற்றுத் தருமாறு கல்வியலாளர்கள் மற்றும் குறித்த பயிற்சி நிறுவன மாணவர்களும் வேண்டுகோள் விடுகின்றனர்.