ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல்களை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக மங்கள சமரவீர டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, “ஈரானின் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எரிபொருள் விலையில் அதிகரிப்பொன்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்தப் புயலை எதிர்கொள்வதற்கு இலங்கை உறுதியானதொரு நிதிக்கொள்கையைப் பேணுவது மிகவும் அவசியமாகும்.
எனவே ஜனாதிபதி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு நேரத்தை ஒடுக்குவதற்கு பதிலாக பொருளாதாரத்தில் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி எரிபொருள் விலைச்சூத்திரத்தைத் தொடர்ந்து பேணுவதுடன், சரியான பாதையில் பயணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.