கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய சகல மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் குறித்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை வரை ஊரடங்கு சட்டம் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மே நான்காம் திகதி முதல் பணிகளை தொடரும் வகையில் சட்டதிட்டங்கள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும் தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்ளை நடத்திச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10 மணிக்கு தனியார் நிறுவனங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதியின் பின்னர் நிறுவனங்களை நடாத்திச்செல்லும் விதம் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நிறுவனங்களின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.