தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.
நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இன்று ஒட்டு மொத்த வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் வரும் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள்.
வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள். அது போன்றதொரு காரியம் தான் இது.
பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.