கல்முனை பிரதேசத்தில் அதிகரித்துவரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஒளிவிளக்குகளை பொருத்தும் தேவைகள் அடங்கிய மகஜரை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் ஐ.எல்.அமினுல் பாரி அவர்களை கடந்த வியாழக்கிழமை (09) அவரது அலுவலகத்தில் கல்முனை பிரதேச சமூக நல செயற்பாட்டாளரும் இம்முறை பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளவருமான றிஸாட் ஷரிஃப் சந்தித்து கையளித்தார்.
குறித்த அந்த மகஜரில் கல்முனை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவை இணைக்கும் மாளிகா சந்தி, கல்முனை வாயிற்கதவு (டாமாஸ்) சந்தி, மருதமுனை மசூர் மெளலான சந்தி போன்ற வாகன நெரிசலுமிக்க சந்திகளில்
நிறுத்தல் சமிக்கை பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, அவ்விடங்களில் குறித்த போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஒளிவிளக்குகளை பொருத்தும்படி வேண்டிக்கொண்டதாகவும் என்னுடைய வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட மாகாணப் பணிப்பாளர் தனது தலைமைக் காரியாலயத்துடன் கலந்துரையாடி இதற்காக நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார் என மகஜரை கையளித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது றிஸாட் ஷரிஃப் தெரிவித்தார்.
மேலும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலைகளுக்கு முன்னாலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஒளிவிளக்குகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை சில நாட்களுக்கு முன்னர் பொருத்தி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-வணக்கம் லண்டனுக்காக-