தற்போது சிகிச்சையில் 620 பேர்
– குணமடைந்தோர் 1980 அதில் கடற்படையினர் 895
– 2,078 ஆவது நபருக்கு பின்னர் சுமார் 500 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 94 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, ஒருவர் குணமடைந்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெற்று சேனபுர மையத்திற்கு மாற்றப்பட்ட புனர்வாழ்வு பெற்ற 76 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலுள்ள 14 பேர், அம்மையத்திலிருந்தவர்களுடன் தொடர்புடைய இராஜாங்கனையைச் சேர்ந்த 04 பேர் ஆகிய 94 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட கைதியை அடுத்து, தற்போது சுமார் 500 பேர் அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (12) பிற்பகல் 3.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,605 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,980 இலிருந்து 1,981 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (11) கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறும் 13பேர், இராஜாங்கனை (05), ஹபராதுவை (01), வெலிக்கந்தை (02), லங்காபுர (01) உள்ளிட்ட புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 39 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த 04 பேர், குவைத்திலிருந்து வந்த ஒருவர் ஆகிய 57 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, இன்றையதினம் (12) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 94 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒருவர் குணமடைந்துள்ளார். நேற்றையதினம் (11) 57 பேரும் நேற்றுமுன்தினம் (10) 300 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று ஒருவர் மாத்திரம் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.