தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்குவதற்கு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை லுணுகலை பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” இன்று இந்த நாட்டிலே இனவாதம் தலைதூக்கியுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது அரசியல் இருப்பை நாம் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு பாரிய சதித்திட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சமூகவலைத்தளங்களில் சேறுபூசப்பட்டுவருகின்றது.
தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையினத்தவர்கள் சரியான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழ் இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு பதுளை மாவட்ட தமிழர்களை அரசியல் அனாதைகளாக்குவதற்கு சதிகள் நடக்கின்றன.
எனினும், எமது மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். எமக்கே வாக்களிப்பார்கள். பொதுத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்.” என்றார்.