கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் போர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்களாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த இப்படுகொலை நிகழ்வினுடைய 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகப் பகுதி எங்கும் இடம்பெற்று வருகின்ற நிலையில் முல்லைத்தீவு நகர் பகுதியில் இயங்கி வருகின்ற பிரதான தனியார் கல்வி நிலையம் ஆகிய நெய்தல் கல்வி நிலையத்தின் வகுப்பறைகளுக்கு செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டதோடு, குறித்த மாணவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் பெயர் பலகைகள் பொறிக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.