யாழ் பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்டதாகு குறிப்பிடப்படும் முச்சக்கர வண்டி சாரதி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இந்த சம்பவம் நடந்தது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தருக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.
காங்கேசன்துறையில் உயர் பொலிஸ் அதிகாரியின் உதவியாளராக கடமையாற்றுகிறார் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்.
“சிவில் உடையில் ஒருவர் நடந்து சென்றார். ஆட்டோ என எமது முச்சக்கரவண்டி சாரதியொருவர் கேட்டார்.
வழக்கமாக நடந்து செல்பவர்களிடம் அப்படித்தான் கேட்பார்கள். சிறிதுதூரம் சென்ற அந்த நபர் திரும்பி வந்து, அடோ என மரியாதை குறைவாக தன்னை அழைத்ததாக வாக்குவாதப்பட்டார்“ என, மத்திய பேருந்து நிலையத்தில் நிற்கும் சாரதிகள் தெரிவித்தனர்.
முரண்பாடு உச்சமடைந்ததையடுத்தது. இன்னொரு முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் சமரசப்படுத்தினார்.
முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதையடுத்து பொலிஸ் நிலையம் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள், நடமாடும் பொலிசாரிடம் விடயத்தை தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சமரசம் செய்ய வந்த சாரதி தன்னை தாக்கியதாக, முரண்பாட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அடையாளம் காட்டியுள்ளார்.
இதையடுத்து அவரை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றனர் பொலிசார். பொலிஸ் நிலையம் செல்லும் வரை தான் தாக்கப்பட்டதாக அந்த முச்சக்கர வண்டி சாரதி தனது தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட சாரதியை, முரண்பாட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதன்போது, குற்றத்தடுப்பு பிரிவில் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மதியளமளவில் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.