நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்பை மீறவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இது அரசியலமைப்பு மீறல் அல்ல என்று அமைச்சர் டுவீட் செய்துள்ளார்.
கஹவத்த பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
முன்னதாக நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தடை ஏற்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இருப்பினும், அவர் சத்தியப்பிரமாணம் செய்தபோது எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுருப்பு பட்டிகளை அணிந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.