ஊடக தர்மத்தினை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக யாழ் பத்திரிகை மீது மருத்துவர் சத்தியமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் முகநூலில் வெளியிட்ட பதிவு இதோ!
யாழ் போதனா வைத்தியசாலையில் தினசரி சுமார் 800 வரையிலான நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவிலும் சுமார் 1100 நோயாளிகள் உள்ளக விடுதியிலும் சுமார் 2600 நோயாளர்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகளிலும் மருத்துவ சேவையினை பெறுகின்றனர். வட பகுதியில் ஏற்படும் எந்த மருத்துவ அனர்த்தங்களுக்கும் இறுதியாக சேவை நாடும் ஒரே நிறுவனமாக யாழ் போதனா வைத்தியசாலை திகழ்கின்றது.
யாழ்ப்பாணத்தில் தினமும் நிகழும் வீதி விபத்துக்களால் தலையில் காயமுற்று உயிருக்கு போராடுபவர்களுக்கான மூளை நரம்பு சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் தனிப்பட்ட சத்திரசிகிச்சை கூடம், பிரத்தியேக விடுதி வசதி என்பனவற்றுடன் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் சுமார் 500 க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் அண்மைக்காலத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. இச் சத்திரசிகிச்சைக்கென சிறப்பான உணர்வழி வைத்திய நிபுணர் தனது கடமையினை இங்கு செவ்வனே புரிகின்றார்.
இவரது சிறப்பு கடமைக்கு பதிலீடாக இடமாற்றத்தில் ஒரு உணர்வழி மருத்துவ நிபுணர் கடமையை பொறுப்பேற்கும் பட்சத்திலேயே அவ் வைத்திய நிபுணரை நிர்வாக ரீதியாக விடுவிக்க முடியும். இதனால் இவர் இடமாற்ற உத்தரவில் இருப்பினும் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வெறுமனவே விடுவிக்க முடியாது. அவ்வாறு விடுவிக்கப்படின் யாழ் போதனா வைத்தியசாலையின் மூளை நரம்பு மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் முடிவுறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் தினசரி பல உயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக தினசரி நிகழும் விபத்து அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படும். பணிப்பாளர் என்றரீதியில் அத்தியாவசியமான சேவைகளை அடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு எமது வைத்திய சேவையை இட்டுச்செல்லும். இது தொடர்பாக எமக்கு புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக இன்றைய தினம் பத்திரிகை ஒன்று பணிப்பாளர்க்கு அகௌரவம் ஏற்படுத்தும் வகையில் அவரின் பெயரினை ஏளனமாக பிரசுரித்தமையானது பத்திரிகை தர்மத்திற்கு முரணான செயலாகவே கருதப்படல் வேண்டும். மேலும் இவ்வாறான தவறான கற்பிதங்கள் சமுகத்தில் பின்னடைவான தாக்கங்களை ஏற்ப்படுத்தும். செய்திகளை வெறுமனே முரண் மனநிலை உடையோரிடம் இருந்து பிரசுரிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேரடியாகவே அவதானித்து உண்மை நிலையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்தல் பத்திரிகையாளரின் முக்கிய பணியாகும்.