மன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாக, சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் பன்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரணவல ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர், மன்னார்- யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பயணித்த டொல்பின் ரக வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது சூட்சுமமான முறையில் குறித்த வாகனத்தின் இருக்கைகளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு, மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் விடத்தல்தீவு மீன் வாடி பகுதியில் 5 கிலோ 95 கிராமும் அதனைத் தொடர்ந்து மோழி என்னும் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நடத்திய தேடுதலில் அப்பகுதியில் இருந்து 26 கிலோ 790 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், சுமார் 46 கிலோ 485 கிராம் கேரளா கஞ்சாவும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.