இலங்கையில் இனஅழிப்புக்கு உள்ளான மக்களை நினைவேந்துவதற்கு உரிய அரசியல்வெளி இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘பெரும்பான்மையினத்தின் தமிழினவழிப்பின் அடையாளச்சின்னமாக யாழ்.பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி, இலங்கை அரசின் உத்திரவுக்கிணங்க அழிக்கப்பட்டமையானது, உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோப உணர்வினையும் வலியினையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தேசம் மீதான பெரும்பான்தை இனவாதப்பூத ஆக்கிரமிப்பின் மற்றுமொரு கோரமுகமாக தமிழ்மக்கள் இதனை உணர்கின்றனர்.
மேலும், இத்தகைய நினைவுச் சின்னங்கள் தமிழ்மக்களின் கூட்டு நினைவுகளில் பெரும்பான்மையினத்தின் ஆக்கிரமிப்பை என்றும் நினைவுபடுத்துபவையாக உள்ளன.
தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் இருந்து பெரும்பான்மை இனவாதப்பூதத்தின் இனவழிப்பையும் கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும்.
தலைமுறை தலைமுறையாக தமிழ்மக்களின் கூட்டுநினைவுகளில் நிறைந்து தம்மைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்தியது. மேலும் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி இலங்கைத்தீவில் இல்லை என்பதனையும் வெளிக்காட்டியிருந்தது.
இன்றைய நினைவுத்தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உரிமைக்காக போராடிய மாவீரர்களை மட்டுமல்ல, இனஅழிப்புக்கு உள்ளான மக்களை நினைவேந்துவதற்கும் உரிய அரசியல்வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது.
இதேவேளை இந்த நினைவுத்தூபி அழிப்பினை சட்டத்துக்கு உட்பட்டதொரு நடவடிக்கையாகவே இலங்கை அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் வெளிக்காட்டுகின்றன. இலங்கை அரசின் நோக்கம் என்ன என்பது பல்கலைக்கழக நிர்வாகத்துகத் தெரியாததொன்றல்ல.
தமிழ்மக்களின் உணர்வின் வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியினைத் தம்மால் அழிக்க முடியாது என்பதனை வலியுறுத்தி தனது பதவியினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் துறந்திருப்பாரேயானால் அவர் தமிழ் மக்களின் மனதில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பார். தமிழ் மக்களின் போராட்ட உணர்வும் உலகக் கவனத்தை ஈர்த்திருக்கும்.
ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கான நாள் நெருங்கி வரும் இச் சூழலில் தெடர்ந்து நிலைமாற்றுக்கால நீதியை பற்றிப் பேசுவது வெறும் காலத்தை வீணடிக்கும் வேலையாகவே இருக்கும் என்பதோடு நீதியைப் புறந்தள்ளிய வகையில் கட்டுமானமயப்படுத்தப்பட்ட இனவழிப்பு தொடர்ந்தும் இடம்பெற வழி சமைக்கும் என்றே நாம் கருதுகின்றோம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.