பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது.
அதேவேளை, சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்பளம் வழங்கக்கூடிய அளவுக்கேற்பவே வேலை நாட்கள் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 15 நாட்களுக்கு மேல் வேலை வழங்கமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருப்பதாக கூறப்படுகின்றது.
எனினும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேலை நாட்களை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.