ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை இன்று ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய இன்று, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இல்லை. ஆனாலும் இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை, முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச் 12ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.