2021ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கினைப்புக் குழு இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கினைப்புக் குழுத் தலைவர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோனோகராதலிங்கம் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இதன்போது பல்துறை சார் அபிவிருத்தி செயற்றிட்டங்களின் முன்னேற்றம், மற்றும் பூர்த்தி செய்யப்படாத திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள், அனுமதி பெறவேண்டிய கருத்திட்டங்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் சுரகிமு கங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டம் மற்றும் உடல் நலன் காக்கும் நிகழ்ச்சித்திட்டம் தயாரித்தல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், ஏனைய திணைக்களகங்களின் தலைவர்கள், உதவிப்பணிப்பாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.