வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (திங்கட்கிழமை) பாடசாலை மாணவர்களால் முற்றுகையிடப்பட்டது.
அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் குறித்த பட்டதாரிகள் ஆசிரியர்களாக கடமையாற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.
பாடசாலையில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முற்றுகையிட்ட மாணவர்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதேச செயலாளர் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் சிலருடன் முன்னெடுத்த பேச்சு வார்த்தையடுத்தும் கோரிக்கை நிறைவேறாத நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இதன் போது ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமாரவிடம் கேட்டபோது, பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம்.
எனினும் ஒருசில நாட்களில் அவர்களை மீண்டும் பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்திருந்தாலும் பிரதேச செயலக வேலைகள் காரணமாக அவர்களை விடுவிப்பதில் தாமதம் காணப்பட்டது.
இந் நிலையிலேயே இப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் என தெரிவித்தார்.