நீதிக்காகவும் உண்மைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த, அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, புகழ்வணக்கம் செலுத்திக் கௌரவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில், பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்தார் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2011ம் ஆண்டு, இலங்கை அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.
வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார். முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு.
விடுதலைக்கும் அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராயப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.
இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.
எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.