18 வயதை எட்டியவர்கள் வாக்களிப்பதற்கான தகுதியான வயதை அடைந்தவுடன் அவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பதிவுகள் ஆண்டுக்கு ஒரு முறைக்கு என்பதற்குப் பதிலாக ஆண்டுக்கு மூன்று முறை புதுப்பிக்கப்படும் என்ற நடைமுறையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையை ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, எதிர்கால தேர்தல்களில் அதிக மக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி பதினெட்டு வயதை எட்டிய இரண்டு வாரங்களுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பதிவுகளைச் செய்ய முடியும். அதன்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவாளர் இந்த பணிகளுக்குத் தயாராவார்.
இதை தொடர்ந்து மூன்று மொழிகளில் வர்த்தமானி வெளியிடப்படும். இதன்போது எந்தவொரு ஆட்சேபனையும் பதிவாளர் எழுதுவதன் மூலம் பத்து நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்று பாராளுமன்ற யோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.