அஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது ஊசியை, முதல் ஊசி செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழினுப்பக்குழு சமர்ப்பித்த கண்டறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலக சுகாதார மையம், தமது கண்டறிதலில், ஆறு மாதங்களில் கூட அஸ்ட்ராசெனெகா இரண்டாவது டோஸை பெற முடியும் என்று கூறியுள்ளது.
இந்தநிலையில் அதுவரை காலப்பகுதிக்கு அஸ்ட்ராசெனெகாவின் முதல் அளவு நோய் எதிர்ப்பு திறனைக்கொண்டிருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
இலங்கை ஆரம்பத்தில் 500,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து இலவசமாகப் பெற்றது, மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது. இரண்டாவது டோஸாக பயன்படுத்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சுமார் 350,000 ஊசிகளை அரசாங்கம் வைத்திருந்தது.
அதில் ஒரு பகுதியை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும், இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் இரண்டாவது அளவை வழங்க பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் ஏற்கனவே முதலாவது அளவு கிடைத்தவர்களுக்கு இரண்டாவது அளவை செலுத்த இன்னும் 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.