உலகளாவிய ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உலக மக்களை அணிதிரட்டி வரும் நிலையில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சாதகமான பங்கு வகித்துள்ள இலங்கையின் பிரதமர் என்ற வகையில் இன்று கடைப்பிடிக்கப்படும் ‘உலக தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை’ முன்னிட்டு செய்தியொன்றை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் 2021ஆம் ஆண்டை குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் சர்வதேச ஆண்டாக பெயரிடுவதற்கு இன்று முழு உலகமும் அணிதிரண்டு வருகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.
குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த நாம் இன்றும் அதற்காக இன்னும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்பதை புதிதாக கூறவேண்டியதில்லை.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு இதுவரை முன்னெடுத்துள்ள முக்கியமான தீர்மானங்கள் காரணமாக மிக விரைவாக உலக நிலைத்தன்மை இலக்கை பூர்த்தி செய்து இலங்கையில் சிறுவர்
தொழிலாளர்களை இல்லாதொழிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. ஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
தொழிலாளர் திணைக்களம் அது தொடர்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதுடன், சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் அத்திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகம் ஆகியன பாராட்டத்தக்க சேவையைச் செய்து வருகின்றன.
குழந்தைகளின் குழந்தை பருவத்தை நாம் குழற்தைகளுக்கு வழங்க வேண்டும். முறையான பாடசாலை கல்வியை பெறும் உரிமையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். முறையான கௌரவமும் கிடைக்க வேண்டும். இப்புதிய மாற்றத்தின் மூலம் 16 வயது வரை முறையான பாடசாலை கல்வியை பெறும் உரிமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய பாடசாலை செல்லாத 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளை இனங்கண்டு பாடசாலைகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்தியுள்ளன. தற்போதைய தலைமுறையை பற்றி மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று நாம் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என இலங்கையின் அன்பான மக்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.