அதிகரித்த இரத்த அழுத்தம், இருதயநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கு தனியார் துறை மருந்து சிட்டைகளுக்கு அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் பெற்றுக்கொண்ட மருந்துகளில் பற்றாக்குறை நிலவுமானால் மருந்து சிட்டையை சமர்ப்பித்து அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள முடியாமல் போனால் அதனால் அத்தகைய நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாலேயே மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நோய்களைக் கொண்ட நோயாளர்கள் நேரத்திற்கு தமது மருந்துகளை உட்கொள்வது அவசியமென்றும் மருந்துகளில் பற்றாக்குறை காணப்பட்டால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.