செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்மானத்திலிருந்து பின்வாங்க வேண்டாம்!

தீர்மானத்திலிருந்து பின்வாங்க வேண்டாம்!

3 minutes read
  • நல்லாட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளுக்கான காப்புறுதி, இன்று முதல் மீண்டும் வழங்கப்படும்.
  • விவசாயிகளின் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்தும் கவனம்.
  • ரூ. 100 இலட்சம் வரையான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட விவசாயச் சங்கங்களுக்கு அனுமதி.

சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாமென விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள 11 இலட்சம் விவசாயிகள் சார்பில், மாவட்ட விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டைய விவசாய முறைமைகளுக்கு மீண்டும் திரும்பி, மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே தங்களின் முக்கியமான கடமையும் பொறுப்புமாகுமென்றும், விவசாயப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறைக்காக, ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்குப் பராட்டுத் தெரிவித்த விவசாயிகள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போல, ஓர் அணியின் கீழிருந்து சேதனப் பசளை சவாலை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர்கள் இது பற்றித் தெரிவித்தனர். இந்தச் சம்மேளனம், 11 இலட்சம் விவசாயிகள், 17,000 விவசாயச் சங்கங்கள் மற்றும் 563 விவசாயச் சேவை மையங்களை உள்ளடக்கிய அமைப்புகளாகும்.

சேதனப் பசளையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள திட்டம் பற்றி, விசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கினார்.

இது திடீரென எடுக்கபட்ட முடிவல்ல, இது, தான் ஜனாதிபதி வேட்பாளராக, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகுமென்று, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பிருந்த பல அரசாங்கங்கள், சேதனப் பசளை பயன்பாட்டின் மூலமான விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இருப்பினும், அவை தோல்வியடைவதற்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி கூறினார்.

சிலர், இதைப் பின்னோக்கிச் செல்லும் முயற்சியாகச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும், முழு உலகிலும் ஒரு புதிய போக்காக இருக்கும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி, நாட்டை விவசாயப் பொருளாதாரத்தின் புதிய பாதைக்குக் கொண்டுசெல்வதாக ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இத்திட்டத்துக்கு எதிராகப் பேசும் பலர், அதிக விலைக்கு சேதனப் பசளையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்காலச் சந்ததியினரைத் தொற்றா நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, வருடாந்தம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்படும் 80,000 மில்லியன் ரூபாயை, நாட்டின் அப்பாவி விவசாயிகளுக்குக் கிடைக்க வழிசெய்வதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்த, இரசாயன உரங்களை வழங்கியதைப் போலவே, களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட தேவையான அளவு சேதன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், தேவையான உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குக் கிடைக்கும்.

விவசாயிகளாலும், தங்களுக்குத் தேவையான சேதன உரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் பணத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை கிடைத்த வருமானம் குறைவடைவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், வருமானம் குறையுமானால், அரசாங்கம் அந்தத் தொகையை வழங்கும் என்றும், விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்கப்பட மாட்டாது என்றும், ஜனாதிபதி உறுதியளித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளுக்கான “விவாயக் காப்புறுதித் திட்டம்”, இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில், அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

“விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது” என்று, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். புதிதாக 105 நெல் களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கவும் விவசாய வங்கிகளுக்கு நிதி உதவி வழங்கவும், விவசாயத் தரவுத்தளத்தை விரைவாக இற்றைப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குளங்கள், கால்வாய்களை புனரமைப்புச் செய்யும் ஒப்பந்தங்களைச் செய்யும் போது, இது வரையில் விவசாயச் சங்கங்களுக்கு ரூ. 20 இலட்சமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத் தொகையை ரூ. 100 லட்சமாக அதிகரிக்கவும் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையங்களில் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் நேரடியாக விவசாயிகள் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, மொஹான் டி சில்வா, , சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More