செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எமது மக்களை ஏன் அச்சுறுத்துகின்றீர்கள்-சபையில் கேள்வி!

எமது மக்களை ஏன் அச்சுறுத்துகின்றீர்கள்-சபையில் கேள்வி!

2 minutes read

நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மடக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பொலிஸார் எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. அவ்வாறானவர்களின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு கோருவதற்காக அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவது இல்லை.

தொடர்ச்சியாக அண்மைக்காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். காலை 9 மணிக்கு விசாரணைக்கு வாருங்கள் 10 மணிக்கு விசாரணைக்கு வாருங்கள் என அழைத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக தற்போது இளைஞர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்றனர். அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிவில் உடையில் வரும் பொலிஸாரே இவ்வாறு கைது செய்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் அவர்கள் அதற்கு பதிலளிப்பது இல்லை. அமைச்சர் சரத் வீரசேகர போன்றாரே அந்த சந்தர்ப்பங்களில் எங்களுக்கு உதவி செய்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்ற நிலையில் பிள்ளையானின் கட்சியினர் இருந்த போது, குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பிள்ளையானின் கட்சியினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறுதான் மட்டக்களப்பில் பொலிஸாரின் செயற்பாடுகள் உள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பில் மண்கொள்ளையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கையில் இரண்டு பொலிஸாரே ஈடுபட்டுள்ளனர். அதிகளவான டிப்பர் வாகனங்கள் மணல் ஏற்றிச் செல்லும் போது குறித்த இருவரினால் மாத்திரம் எவ்வாறு சோதனையில் ஈடுபட முடியும்.

அதேபோன்று மட்டக்களப்பில் ஒரு இடத்தில் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நடந்தது என்ற போதைப்பொருள் வைத்திருந்தவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தவரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். இதுதான் அங்கு நடக்கின்றது.

அண்மையில் இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுவாகலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அதுகுறித்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என அறிந்து கொள்வதற்காக ஓ.ஐ.சிக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவரிற்கு அடுத்த நிலையில் உள்ளவரின் தொலைபேசி இலக்கினை வழங்கினர்.

நான் அவருக்கு பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மீண்டும் எனக்கு அவர் அழைப்பினை ஏற்படுத்தவும் இல்லை. இதுதான் மட்டக்களப்பு பொலிஸாரின் நிலையாக உள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More