ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது.
ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழும் தமிழர்களின் அமைப்புகள் சில வடக்கு-கிழக்குக்கு உதவ விரும்பியபொழுது அதனை அரசாங்கம் நிராகரித்தது.அந்த உதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடாக தருவதற்கு அவை முயற்சித்தன.அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த உதவிகளை வடக்கு கிழக்குக்கு என்று வாங்காமல் முழு நாட்டுக்குமாக வாங்கினால் நல்லது என்று அந்த அமைப்புகளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.
ஒன்று அந்த உதவியை பெற்றால் அது புலம்பெயர்ந்த தமிழ் தரப்பை அங்கீகரிப்பது ஆகிவிடும், எனவே அதை செய்ய அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.இரண்டாவது காரணம் தமிழ்த் தரப்புக்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சிக்கின்றன என்று ஒரு சந்தேகம். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை தடை செய்து அவற்றிடமிருந்து ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் கிடைக்கவிருந்த மனிதாபிமான உதவிகளையும் நிராகரித்த ஓர் அரசாங்கம் இப்பொழுது அதே புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி என் வேண்டுகோளை விடுகிறது?
நீதிக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தரப்புகளை விடவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் அதிகம் வினைத்திறனோடு தொடர்ச்சியாக செயல்படுகிறார்கள் என்று கருதியதால் அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோளை விடுத்திருக்கலாம்.ஆனால் அரசாங்கம் கேட்பதுபோல உள்நாட்டுப் பொறிமுறையை தமிழ்மக்கள் நம்பக் கூடிய அளவிற்கு இந்த அரசாங்கத்தின் கடந்த சுமார் 20 மாத கால ஆட்சி அமையவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலம் அல்லது ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடந்த சுமார்20 மாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் சித்திரம் உள்நாட்டு நீதிப் பொறிமுறை குறித்தோ அல்லது நல்லிணக்கத்தை குறித்தோ அல்லது சமாதான சகவாழ்வு குறித்தோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது குறைந்த பட்சம் நிலைமாறுகால நீதி குறித்தோ நம்பிக்கை கொள்ளத்தக்க ஒரு சித்திரம் அல்ல.
நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த ஓர் அரசாங்கம் இது. ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சிறிய தேசிய இனங்களின் உரிமைகளை அதிகம் புறக்கணித்த ஓர் அரசாங்கம் இது. தனக்குக் கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தனிச் சிங்கள பௌத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக வியாக்கியானம் செய்த ஓர் அரசாங்கம் இது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து மையத்தில் மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்ட ஓர் அரசாங்கம் இது கடந்த சுமார் 20 மாதங்களாக நாட்டை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் ராணுவ மயப்படுத்திய ஓர் அரசாங்கமும் இது.
தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனப்படுவது ஏனைய இனங்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பல்லின சூழலையும் பல்சமய சூழலையும் நிராகரிக்கும் ஒரு கோட்பாடாகும். இவ்வாறு தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கமாக காட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவைகள் தொடர்பில் விசுவாசமாக செயற்படும் என்று தமிழர்கள் எப்படி நம்புவது?
இந்த 20 மாதங்களில் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஜெனீவாவிலும் வொஷிங்டனிலும் அரசுப் பிரதானிகள் தெரிவித்த கருத்துக்களை தமிழ் மக்கள் நம்புவது கடினம்.குறிப்பாக வொஷிங்டனில் ஐநா பொதுச்செயலரை சந்தித்தபோது ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்த கருத்துக்களும் ஐநாவில் அவர் ஆற்றிய உரையும் உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்துபவைகளாகக் காணப்படுகின்றன.ஆனால் உள்நாட்டு நீதிபரிபாலன கட்டமைப்பின் தோல்வி அல்லது போதாமை காரணமாகத்தான் அனைத்துலக சமூகம் ஐநாவில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நிலைமாறுகால நீதிக்கான 30/1தீர்மானத்தை நிறைவேற்றியது.நிலைமாறுகால நீதி எனப்படுவது உள்நாட்டு நீதியின் தோல்வியை அல்லது போதாமையில் விளைவாகத்தான் அனைத்துலக சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
அத்தீர்மானத்தை கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்க தன்னால் முடிந்தளவுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறைக்கு வெள்ளையடிக்க முயற்சித்தார்.அதற்கு கூட்டமைப்பும் மறைமுகமாக ஆதரவை நக்கியது. எனினும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அக்குழந்தையை அனாதையாக்கினார்.அதன்பின் குற்றுயிராய் கிடந்த அந்தச் சிசுவை தொடர்ந்தும் சாகவிடாமல் ஆனால் அதற்குப் பாலும் கொடாமல் இந்த அரசாங்கம் பராமரித்து வருகிறது.அவ்வாறு ஜெனிவாவில் கணக்கு காட்டுவதற்காக பொய்யாகச் செய்யப்படும் வீட்டுவேலைகளை தொகுத்து கடந்த 31ஆம் திகதி அரசாங்கம் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியது.
இவ்வாறு நிலைமாறுகால நீதியை ஐநாவுக்காகச் செய்யப்படும் வீட்டு வேலையாக காண்பிப்பது என்பது ஏற்கனவே ரணிலின் காலத்திலேயே தொடக்கப்பட்ட ஒரு உத்தி. அதனைத்தான் இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் ரணில் நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகக் காணப்பட்டார்.இந்த அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை.அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு.இந்த அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஐநா பரிந்துரைக்கும் வடிவத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராஜபக்ச பாணியிலான ஒரு வடிவத்தில் அதை நாட்டில் நடைமுறைப்படுத்தத் தயார் என்று கடந்த கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறது. அதேசமயம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சான்றுகளை திரட்டுவதற்கான பொறிமுறை தொடர்பில் இந்த அரசாங்கம் ஐநாவோடு முரண்படுகிறது. இப்பொழுது அரசாங்கத்துக்குள்ள தாண்டக் கடினமான தடையும் அதுதான்.
அப்பொறிமுறை இந்த ஆண்டு முடிவதற்கிடையில் இயங்க தொடங்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நடந்துமுடிந்த கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அப்பொறிமுறைக்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை பிரித்தானியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே வழங்கிவிட்டன. அப்பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது. ஆனால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமோ இல்லையோ அந்த பொறிமுறை இயங்கப்போகிறது. அரசாங்கம் அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்குமோ இல்லையோ அது நாட்டுக்கு வெளியிலாவது இயங்கப்போகிறது. எதிர்காலத்தில் படைத்தரப்புக்கு எதிராக குற்றம்சுமத்த தேவையான ஆதாரங்களை திரட்டக்கூடிய ஒரு பொறிமுறையாக அரசாங்கம் அதைப் பார்க்கிறது.எனவே அப்பொறிமுறையை எப்படி உள்நாட்டு மயப்படுத்தி பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கிறது. அதனால்தான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை நோக்கி அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
போர்க்குற்றம் தொடர்பான சான்றுகளை திரட்டு பொறிமுறையை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா தரப்பும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளவில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. ஆனால் அரசாங்கம் அப்பொறிமுறையை ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. ஏனெனில் படைத்தரப்பை விசாரிக்க தேவையான சான்றுகளை திரட்டும் பொறிமுறையானது இறுதியிலும் இறுதியாக எதிர்காலத்தில் தமக்கும் எதிரானது என்று இந்த அரசாங்கத்தின் பிரதானிகளை காணப்படும் இரண்டு சகோதரர்களும் கருத இடமுண்டு.குற்றம் சுமத்தப்படும் படையினருக்கு உரிய கட்டளைகளை வழங்கும் அரசியல் தீர்மானங்களை எடுத்தது இந்த இரண்டு சகோதரர்களும்தான்.எனவே அந்தப் பொறிமுறையை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது.
அதைப் பலவீனப்படுத்துவது என்றால் ஒப்பீட்டளவில் சாத்தியமான இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மேற்கு நாடுகளையும் ஐநாவையும் அனுசரித்துப் போய் தனக்குச் சாதகமாக கையாள்வது. இரண்டாவது குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை சமாளிப்பது. கையாள்வது. ஐநாவை கையாள்வது என்பது ஐநாவில் அங்கம் வகிக்கும் அரசுகளை கையாள்வதுதான். குறிப்பாக போர்க் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்னிறுத்தும் மேற்கு நாடுகளை சமாளிப்பதுதான். அந்த வேலையை ஏற்கனவே பசில் ராஜபக்ச தொடங்கிவிட்டார். அதில் அவரும் ஜி எல் பீரிசும் ஒப்பீட்டளவில் முன்னேறத் தொடங்கியிருப்பதைத்தான் கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை காட்டுகிறதா ?
மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாண்டால் ஐநாவில் இருந்து அரசாங்கத்திற்கு வரக்கூடிய அழுத்தம் ஓரளவுக்கு குறையும். சீனாவிடம் மட்டும் கடனுதவி பெறுவதற்கு பதிலாக மேற்கு நாடுகளின் நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவிகளைப் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைக் கூறியது என்பது covid-19ககுப் பின்னரான துருவமயப்படும் உலகச் சூழலில் இச்சிறிய தீவு சிக்குப்படுவதை தடுக்கும் நோக்கிலானதே.அரசாங்கமும் அது விடயத்தில் பசில் ராஜபக்ச, பீரிஸ், மிலிந்த மொரகொட. போன்றவர்களை முன்னிறுத்தி காய்களை நகர்த்தி வருகிறது இக்காய்நகர்த்தல்களில் ஆகப் பிந்தியதுதான் ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை நோக்கி விடுத்த கோரிக்கைகள் ஆகும். இக்கோரிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது ?
முதலில் ஒன்றை குறிப்பிட வேண்டும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் என்பது தட்டையான ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்ட ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பு அல்ல.அது பல அடுக்குகளைக் கொண்ட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பல்வேறு கருத்துநிலைகளைக் கொண்ட அதிகம் சிதறிக் காணப்படும் ஒரு சமூகம். உலகின் மிகவும் கவர்ச்சி மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக அது காணப்படுகிறது.
அதேசமயம் மிகமோசமாக சிதறுண்டிருக்கும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது.
அதை வெற்றிகரமாகப் பிரித்தாள முடியும் என்பதனை ரணில் விக்கிரமசிங்க நிரூபித்திருந்தார்.அவர் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடைநீக்கி அரவணைத்தார்.அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியுமீட்டினார். முன்னைய ஐநா தீர்மானங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புக்கள் இரண்டுபட்டுநின்றன. ஒரு பகுதி நிலைமாறுகால நீதியை வலியுறுத்தியது. இன்னொரு பகுதி பரிகார நீதியை வலியுறுத்தியது. இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் பரப்பை பிரித்து ஆள்வதில் ரணில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியும் இருந்தார்.அவரைப்போல புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை கையாள கோட்டாபாயவால் முடியாது.ஏனெனில் இவரிடம் நல்லிணக்க முகமூடி கிடையாது.
எனினும் அப்படி ஒரு முகமூடியை அரசாங்கம் அணிய முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை அதன் அண்மைக்கால செயற்பாடுகள் அதிகப்படுத்துகின்றன.
ஐநாவுக்கு கணக்கு காட்டும் கண்துடைப்பான வீட்டு வேலைகள் நல்லிணக்கத்தை உருவாக்காது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தை பிரித்தாள்வதும் நல்லிணக்கத்தை உருவாக்காது. நிலைமாறுகால நீதியை உள்நாட்டு வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் கட்டியெழுப்பும் பொய்த்தோற்றத்தை அதன் ராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான லோகான் ரத்வத்த அம்பலப்படுத்தி இருக்கிறார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர் நடந்துகொண்டவிதம் அரசாங்கத்தின் நல்லிணக்க முகமூடியை கிழிக்கக் கூடியது. அது போலவே நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிசார் கையாண்ட விதமும் அரசாங்கத்தின் உள்நாட்டு வடிவிலான நிலைமாறுகால நீதி ஒரு பொய் என்பதை நிரூபித்திருக்கிறதா?
நிலாந்தன்