வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழர் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விதுர விக்கிரமநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (5) விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் ஆய்வுகள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
“எமது பாரம்பரிய தமிழர் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து, பராமரிக்கும் செயற்பாடுகளைத் சரியாக திட்டமிடல், அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான அகழாய்வு பணிகளை நடைமுறைப்படுத்துவதனால் தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தொல்லியல் திணைக்களம் மற்றும் தொல்லியல்சார் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும்” என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறுகையில்,
அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பல்வேறு ஆரோக்கியமான விடயங்களை கலந்துரையாடினோம். குறிப்பாக வடக்கு கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்து, தமிழர் பாரம்பரிய, கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கமாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பேசினோம்.
இந்த செயற்பாடுகளில் எந்தவித இன முரண்பாடுகள் ஏற்படாத வகையிலும், இலங்கையில் தொன்மை, பாரம்பரியம் மற்றும் சகல மக்களின் வரலாறுகள், தொன்மைகள், சான்றுகளை பாதுகாக்கும் விதமாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோல் வடக்கு கிழக்கிலும் தொளிபொருள் பாதுகாப்பு சார் கற்கை நெறிகளை உருவாக்குதல், அதில் டிப்ளோம சான்றிதல்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுமட்டுமல்ல நாளைய தினம் (இன்று) யாழ் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். இதில் வடக்கில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உற்பட்ட தொல்பொருள் பகுதிகளை யாழ் பல்கலைக்கழகம் மூலமாக நிருவகிக்கும், அதேபோல் பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் என்றார்.