பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும், அது முற்றாக நீக்கப்பட வேண்டியதே அவசியம் என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதிருக்கின்ற சட்டத்தின்படி தடுத்து வைத்தல் உத்தரவின் கீழ் உள்ள 18 மாத தடுப்புக் காவல் காலம், 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரைச் சட்டத்தரணிகள் அணுகுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நீதவான் ஒருவர் விஜயம் செய்து, அவர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்றபோதும், அதனையும் ஒரு முன்னேற்றமாகவே தாம் கருதுவதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட சூழ்நிலையில் இந்த சட்டம் அவசியம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.