வங்கதேசத்தின் Sonadia தீவிலிருந்து படகு மூலம் வங்காள விரிகுடா வழியாக மலேசியா செல்ல முயன்ற 135 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
“Kutupalang முகாமில் உள்ள தரகர்கள் 135 ரோஹிங்கியா அகதிகளை Sonadia தீவில் ஒன்று திரட்டி அங்கிருந்து அவர்களை மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டு இருந்திருக்கின்றனர்,” என காக்ஸ் பஜாரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் Rafiqul Islam தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதுமட்டுமின்றி, இதற்கு முந்தைய காலங்களிலும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். அந்த வகையில், சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வங்கதேச முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் நிச்சயத்தன்மையற்ற எதிர்காலத்தில் சிக்கியுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரம் தேடி மலேசியாவை நோக்கி படகு வழியாக செல்வது தொடர் நிகழ்வாக உள்ளது.