பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத அளவிற்கு கொந்தளிப்பான காலகட்டத்தில் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றால் பொருளாதார சரிவுகள் அதிகரித்துள்ளதாகவும் இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் வாழும் இலங்கையர்கள் சிலர் இலங்கையின் தலைமைத்துவத்தை நியூசிலாந்து அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி மனுவொன்றை தயாரித்து அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலங்கையின் தலைமைத்துவத்தை அவர் கண்டிக்கிறாரா என்று ஜெசிந்தா ஆர்டனிடம் கேட்கப்பட்டபோது, அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் மக்களிடம் அதிகரித்து வரும் விரக்தியை தாம் ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்திற்கான வெளியுறவுக் கொள்கைக்கு அமைய, அமைச்சகத்திடம் இருந்து 24 மணிநேரத்தில் கூடுதல் விளக்கத்தை பெற தாம் விரும்புவதாகவும் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசியலிலும் உள்நாட்டிலும் கொந்தளிப்பான காலகட்டம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.