மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டது.
எதிர்வரும் 02 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவித்து அஜித் நிவார்ட் கப்ராலுக்கு இன்று(18) மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 07ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, அவர் இன்று(18) மன்றில் ஆஜராகாத காரணத்தினால் மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல முன்னிலையில் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான முறைப்பாடு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில், திரைசேறி பற்றுச்சீட்டுக்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு விற்பனை செய்தமையூடாக அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
06 குற்றச்சாட்டுக்களின் கீழ், முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான், நீதிமன்றத்தில் இன்று(18) ஆஜராகுமாறு கடந்த 07ஆம் திகதி அறிவித்தல் பிறப்பித்தார்.
விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக வௌிநாட்டு பயணத்தடையையும் விதித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.