எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் தாம் மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறைகளில் இருந்து விலகி இருக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.
ரம்புக்கனையில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.