அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளைய தினம் (28) நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்களின் இணைப்பு அலுவலகத்தின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.
பாடசாலைகளில் 30,000-இற்கும் மேற்பட்ட அசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், மக்களின் வாழ்வுரிமையைக்கூட அரசாங்கம் வழங்கவில்லை எனவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு உணவு கூட கிடைக்காத சூழ்நிலையில் தான் அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் கிழக்கு பல்கலைக்கழகமும் யாழ். பல்கலைக்கழகமும் இணைந்துகொள்ளவுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கையினூடாக கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கம் தமது ஆதரவை தெரிவித்துள்ளன