சம்பிராதயப்பூர்வ பாராளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சி சார்பற்ற அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டுவர அனைவரது அதிகபட்ச ஒத்துழைப்பையும் மிகுந்த அர்ப்பணிப்பையும் வழங்கி புதிய அரசியல் முறைமை ஊடாக பயணிப்பதே தற்போதுள்ள ஒரே வழி என பிரதமரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
வரலாற்றில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மக்களின் கருத்துகளுக்கு அமைவாக தீர்வுகள் காணப்பட வேண்டுமென்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.
மக்கள் கோரும் அரசியல் தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தும் போது, அவர்கள் ராஜபக்ஸக்கள் இல்லாத ஆட்சியை கோருகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள 02 கடிதங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, போராட்டக்களத்திலுள்ள இளைஞர், யுவதிகள் கோரும் சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே தாம் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன்போது, போராட்டக்காரர்களின் கருத்துக்கள் அடங்கிய பிரேரணையொன்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டக்களத்தின் கோரிக்கைகளை தான் உணர்ந்து செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த கோரிக்கைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கட்டாயமாக இராஜினாமா செய்வது தொடர்பான தனது நிலைப்பாடு, நிலையானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
இந்நாட்டின் போராடும் மக்கள் கோரும் சீர்திருத்தங்களுக்கு இணையான வேலைத்திட்டத்திற்காகவே தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் செயற்பட்டு வருவதாகவும் போராட்டம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்படமாட்டது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.